எதிர்காலமே பென்சில் முனையில் தான்
கிராபீன் (Graphene)
என்பது கரி அல்லது கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுள் ஒன்று. மற்றொன்று வைரம். இது வலைப்பின்னல் போன்ற, அறுபக்க வடிவில் பிணைக்கப்பட்டுள்ள கரிம அணுக்களாலான, மெல்லிய தாளையொத்த பொருள். இதுவே முதலில் உருவாக்கப்பட்ட இரு-பரிமாணப் பொருள் எனலாம்.[1] கிராபீனின் தடிமன் ஒரு-அணு அளவையொத்தது. இதிலுள்ள கரிமஅணுக்கள் sp2 இணைப்பில் உருவானவை; இதன் வேதிச் சமன்பாடு C62H20.[2]
கிராபீன் ஆண்ட்ரே கேம், கான்ஸ்ட்டாண்டின் நோவாசெலோவ் ஆகியோரால் முதன்முதலில் கிராபைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது; இச்செயலுக்காகவும் கிராபீனைப் பற்றிய இயற்பியலை விளக்கியதற்காகவும் இவர்களிருவருக்கும் இயற்பியல் நோபல் பரிசு2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கேமும் நோவாசெலோவும் பென்சில் கரியின்மேல் தெரியொட்டு நாடாவை (sellotape) மீண்டும் மீண்டும் ஒற்றி எடுப்பதன் மூலம் கிராபைட்டை செதில் செதிலாக்கினர்; ஆனால், அதன் தடிமன் அதிகமாகவே இருந்ததால், அச்செதில்களை ஆக்சிசனேற்றப்பட்ட சிலிக்கான் தளத்தின் மேல் வைத்து மீண்டும் ஒற்று வேலையைச் செய்ததன் மூலம் இறுதியில் கிராபீனைப் பிரித்தெடுத்தனர்.[3]
கிராபீனின் சில வியத்தகு சிறப்பியல்புகள்
- உலகிலேயே மிகவும் மெல்லிய பொருளான கிராபீன், உலகிலேயே மிகவும் உறுதியான பொருளும் கூட! (எஃகை விட இது 100 மடங்கு உறுதியானது) [1]
- ஒரு மில்லிமீட்டர் தடிமனுள்ள கிராபைட்டில் மூன்று மில்லியன் கிராபீன் அடுக்குகளை வைக்க முடியும்; அவ்வளவு மெலிதான பொருள் இது.[3]
- இது தாமிரத்தையொத்த மின்கடத்துத் தன்மை கொண்டது; இதன் வழியாகப் பாயும் மின்னோட்டம் மிகச்சிறியளவு ஆற்றலையே இழப்பதாலும் கட்டமைப்பதற்கு எளியதாக இது இருப்பதாலும் தொகுப்புச் சுற்றுகள் உருவாக்குவதில் எதிர்காலத்தில் கிராபீன் பெருமளவு பங்களிக்கக் கூடும்.
- கிராபீனைக் கொண்டு சுழிப்பரிமாணப் பொருளான ஃபுல்லரீன், ஒரு-பரிமாணப் பொருளான கரிம நேனோகுழாய், முப்பரிமாணப் பொருளான கிராபைட் ஆகியவற்றை உருவாக்க இயலும்.
- ஏறக்குறைய முழுமையான ஒளி-ஊடுருவுந் தன்மையுடன் இருந்தாலும், இது மிகுந்த அடர்த்தி கொண்டுள்ளதால், மிகச்சிறிய அணுவான ஒரு ஈலியம் அணு கூட இதனுள் ஊடுருவ முடியாது.
Comments
Post a Comment